Friday, 10 January 2014

இயேசுவை நாம் எங்கே காணலாம்?

இயேசுவை நாம் எங்கே காணலாம்?
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். - (மத்தேயு 25:40).

கர்த்தருக்கென்று உண்மையாய் ஊழியம் செய்த ஒரு பெண்மணி வெகுநாளாய் 'ஆண்டவரே நான் உம்மை பார்க்க வேண்டும் . தரிசனத்திலோ சொப்பனத்திலோ உம் முகத்தை காண் வேண்டும்' என்று சொல்லி ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது அனுதின ஜெபத்தில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. ஒருமுறை அவர்கள் வெளி மாநிலத்திற்கு ஊழியத்தினிமித்தம் சென்றிருந்தார்கள். அச்சமயம் தன் குடும்பத்தினரோடு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சாலையில் வேனில் சென்று கொண்டிருந்தார்கள்.


அப்போது வழியருகே ஒருவர் சரியான ஆடையின்றி படுத்திருப்பதை கண்டு அவருக்கு உதவி செய்யும் எண்ணத்தில் காரை நிறுத்தும்படி கூறினார்கள். உடனிருந்தோர், 'இம்மனிதன் குடித்துவிட்டு படுத்திருக்கலாம், நமக்கு ஏன் வீண் வம்பு, போகலாம்' என்றனர். இருப்பினும் இவ்வூழியரது வற்புறுத்தலால் காரை நிறுத்தி அவரிடம் விசாரித்தபோது அவர் மிகவும் உடல் நலக்குறைவினால் கவனிப்பாரற்று படுத்திருப்பது தெரிய வந்தது. அவரை கனிவோடு விசாரித்து விட்டு தங்களிடமிருந்த உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு சென்றார்.

ஒரு சில நாட்களுக்கு பின் தன் ஜெப வேளையிலே ஆண்டவரே, நான் உம்மை எப்படியாவது பார்க்க வேண்டும். அதுவே என் உள்ளத்தின் வாஞ்சை என ஜெபித்தார்கள். அந்த நொடிப் பொழுதில் 'இரண்டு தினங்களுக்கு முன்பு என்னை வெளிப்படுத்தினேனே, என்னை நீ பார்த்தாயே' என்று ஆண்டவர் உணர்த்துவதைக் கண்டார். எப்போது ஆண்டவரே என்ற போது, 'அன்று சாலையோரத்தில் உன்னிடம் உணவு பொட்டலத்தையும் தண்ணீரையும் பெற்றுக் கொண்டது நான்தான்' என உணர்த்தினார். அப்போது மத்தேயு 25-ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட சம்பவம் அவ்வூழியரின் நினைவிற்கு வந்தது. அந்த வேதப்பகுதியை நாம் தியானிக்கலாம்.

நியாயத்தீர்ப்பின் நாளிலே உலக மக்களை இயேசுகிறிஸ்து இரு பிரிவுகளாய் பிரிக்கிறார். அதில் வலப்பக்கமுள்ளவர்களை பார்த்து, நான் பசியாயிருந்தேன், தாகமாயிருந்தேன் என்னை போஷித்தீர்கள், உடையில்லாதிருந்தேன், என்னை உடுத்துவித்தீர்கள், வியாதியாய் இருந்தேன் விசாரித்தீர்கள், காவலிலிருந்தேன் என்னை பார்க்க வந்தீர்கள்' என்றார்;. அவர்கள் ஆச்சரியத்தோடு எப்போது இப்படியெல்லாம் செய்தோம் என்றனர். அதற்கு இயேசு அற்பமாய் காண்ப்படுகிற எந்த ஒரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் உதவி எனக்கே செய்ததாகும் என்றார். இதில் எவ்வளவு ஆச்சசரியமான உண்மை விளக்கப்பட்டுள்ளது பார்த்தீர்களா? இயேசுகிறிஸ்து இந்த சிறியர்கள் மேல் எவ்வளவு கரிசனையோடு இருக்கிறார், தனனை அவர்களோடு ஒப்பிட்டு பேசுகிறார்!

சில நேரங்களில் நாம் 'உண்மையான தேவன் இருக்கும்போது உலகத்தில் மக்கள் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா? என்று நினைக்கிறோம். ஆனால் தேவனின் வழியை பாருங்கள். இப்படி பாடுகளோடு இருப்பவர்களுக்கு உதவுவது நமது கடமை என்கிறார். உடனே நாம் இவர்களுக்கென்று ஒரு ஊழிய ஸ்தாபனத்தை துவக்கவேண்டுமா? அல்லது பெரிய அளவில் ஏதாவது செய்ய வேண்டுமா? என யோசிக்க தேவையில்லை. மாறாக சிறிய விதத்திலாவது அவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் இயன்றதை செய்ய வேண்டும். சிலர் தங்களால் உதவி செய்ய திராணி இருந்தாலும் இது நமக்கு ஏன் தொல்லை என்று எந்த உதவியுமே செய்வதில்லை. ஒரு முறை செய்தால் மீண்டும் செய்ய வேண்டி வரும் என்று சிலர் எதையுமே செய்வதில்லை. வசனத்தை கவனியுங்கள், வியாதியாய் இருந்தேன், என்னை விசாரித்தீர்கள் என்கிறார். இங்கு சுகமளிக்கும் வரமல்ல, அன்போடு விசாரிப்பதே முக்கியப்படுத்தப்படுகிறது. ஆகவே தானதர்மம், அன்பின் கிரியைகள் போன்ற சின்னசின்ன காரியங்களை செய்ய எப்போதும் ஆயத்தமாயிருங்கள். அதே நேரத்தில் ஒன்றை மறந்து விடக்கூடாது. வலது பக்கம் நின்றவர்கள் இயேசுகிறிஸ்து என்று எண்ணி உதவி செய்யவில்லை. மாறாக இருதயத்தின் அன்பினால் செய்தனர் பிரதிபலனுக்காக அல்ல, அன்பினிமித்தம் ஊழியம் செய்யுங்கள். அனுதினமும் இயேசுவை காணுங்கள்.

No comments:

Post a Comment